லாவண்யா:
கமலதேவியின் கதை நிழற்குடை. இந்தக் கதையின் சிறப்பு என்றால் ராணி மங்கம்மா நடந்து
போன தம்மம்பட்டி திருச்சி சாலையின் ஓரத்தில் நின்று பச்சைமலை அடிவாரத்து மலையடியின்
வறண்டகால மண் நிலத்தின் கவித்துவமான சித்தரிப்பும், கல்லூரி கிளிகள் சலசலக்கும் மார்டன்
வாயாடித்தனமும். ஆனால் எனக்கு வழக்கம் போல இவர் கதை கொடுக்கும் குழப்பத்தையே
இந்தக் கதையும் கொடுத்தது. மாதாந்திர பெண் நோவு சில பெண்களுக்கு மனசிக்கலைக்
கொடுக்கும், கண்டதை நினைக்கத் தோன்றும் தூக்கமின்மையை கொடுக்கும் இந்த கோணத்தில்
இதை பார்க்க வேண்டுமா? முதலில் வரும் சின்னவர் யார்? அவரோடு சுவாதிக்கு என்ன
தொடர்பு? அதன் பின்னர் வரும் மணிஅய்யா யார்?
சங்கர நாராயணன்:
கமலதேவியோட நிழற்குடை தலைப்புல இருந்து முடிவு வரை ஒன்னும் புரியவில்லை ..
மன்னிக்கவும்
லாவண்யா:
இந்த கதைக்கு தலைப்பு நிழற்குடை என்று ஏன் வைத்தீர்கள்?
கமலதேவி:
அக்கறை என்பதை நிழற்குடையாக…..
லாவண்யா:
அக்கறைக்கும் கதையோட முதல் பகுதிக்கும் என்ன சம்மந்தம்? அம்மாச்சியும் அக்கறையா
இருக்கிறத தவிர
கமலதேவி:
கதைமுழுக்க சின்ன சின்னதா..அங்கங்க சகமனித அக்கறை…
ஹரீஸ் கண்பத்:
நிழற்குடை கதை வாசிச்சேன். கதையோட முக்கியமான பிரச்னையா எனக்கு பட்டது கதையின்
மையமான ஸ்வாதியின் மனநிலை எந்த இடத்திலுமே அழுத்தமா வெளிப்படல. அதுக்கான
காரணங்களா எனக்கு தோணினது.
- முதல்ல கதையோட நீளம். எந்த இடத்தையும் நிறுத்தி நிதானமா சொல்ல இடமில்லாம கதை
ரொம்ப சீக்கிரம் முடிஞ்சிடுது. - அடுத்து கதை முழுக்கவே ஸ்வாதியின் புறவயப் பார்வையில் சொல்லப்படுவது.
- மூணாவது இத்தனை சின்ன கதைக்குள்ள , ஸ்வாதி ஹாஸ்டலுக்கு வந்ததும் திடும்மென
ஏகப்பட்ட கதாப்பாத்திரங்கள் உள்ளே நுழைந்து ஒவ்வொரு வரியாய் சிறு சிறு வசனங்களை
பேசிட்டே போறாங்க. அந்த இடங்கள் பின்தொடர்றது கொஞ்சம் சிரமமா இருந்தது. மேலும்
கதைக்கு முக்கியமான பாயிண்டான தோழிகளின் அக்கறை சரியா வெளிப்படலையோன்னு ஒரு
ஃபீல்.
சங்கர நாராயணன்:
எழுத்தாளர் csk இந்த genre ல அடிக்கடி எழுதுவார்.. அதுனால கூட பெரிய தாக்கம் இல்லாம
போயிருக்கும் எனக்கு
லாவண்யா:
இதில் கதைத் தருணம் என்பது எது?
என்ன தரிசிக்கிறோம்? இந்த கதையில் நீங்க சொன்ன அக்கறை என்ற விஷயத்தை நீங்களே
சொன்ன பிறகே கதைக்குள் கோர்க்கிறோம். அது நானாக வாசிக்கும் போது புரியறபடி எழுத
இந்த கதையை என்ன செய்யனும்?
எழுத்தாளர் சமயவேல்:
கதைத் தருணம், உள் முடிச்சு, என்ன தரிசிக்கிறோம், கதையில் புதியதாக என்ன
கண்டுபிடிக்கப்பட்டது, கடைசிப் பத்தியில் அதிரடித் திருப்பம்…..என்று நீங்கள் கற்ற சிறுகதைக்
கூறுகள் எல்லாக் கதைகளிலும் இருக்க வேண்டியதில்லை. கமலதேவியின் நுண்விவரணைகளே
கதையாகிறது. மாதாந்திர நாட்களில் ஒரு பெண்ணிற்கு அவளது சூழலில் இருக்கும் நுணா
மரத்தின் சிற்றிலைகள் தொடங்கி கதைநெடுக எவ்வளவு நிழற்குடைகள். சிறியவர், அம்மாச்சி,
மணி அய்யா என்று தொடரும் மென்மையான ஆதுரம் ஒரு நீள்கவிதையாகிறது. கவிதைத்
தருணம் கதைத் தருணமாகும் அபூர்வம் எப்போதாவது தான் நடக்கும்.
லாவண்யா:
ஆம் நான் சொல்ல மறந்த விஷயத்தை நீங்கள் சுட்டி காட்டினீர்கள் சமயவேல் சார். நன்றி. கதை
ஹாஸ்டலில் நுழையும் வரை கவிதை. அங்கே நடக்கும் சலசலப்பில் கவிதை கதையிலிருந்து
நழுவி என்னை திக்கற்ற திசையில் திருப்பி விட்டது தான் ஆதங்கம்.
கமலதேவி:
அழுந்திய அகம்…சலசலக்கும் புறம் என்று கதையை இரண்டாக பிரித்து எழுத முயன்றேன்.